நதிகளின் தற்கொலை!

சேது ராமலிங்கம்
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குக் குடிநீர் ரயிலில் ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டுவரும் அளவுக்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சமும் பற்றாக்குறையும் ஏற்பட்டதற்கு யார் காரணம், ஏன் தண்ணீர் மேலாண்மையை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் போகாமல் வேறொரு பிரச்சினையானது தீர்வாக வைக்கப்படுகிறது கடலில் கலக்கும் நதிகளை இணைப்பது, கங்கை காவிரி இணைப்புத் திட்டம், கோதாவரி இணைப்புத் திட்டம் எனத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நதிகளின் மரணம்
நதிகள் இணைப்பு ஒன்றுதான் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லாதது என்று கூறி பல நேரங்களில் மத்திய நீர் ஆணையத்தினால் (Central Water Commission) நிராகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் துறை சார்ந்த நிபுணர்களால் இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நதிகளின் தற்கொலைக்குச் சமமானது என்றும் கருத்து கூறியுள்ளனர். மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நதிகளின் நீரோட்டத்தை மேல் நோக்கித் திருப்புவது என்பது நதிகளை வறண்டு போகச் செய்து அவற்றை மரணமடையச் செய்வதாகும்.
இந்தத் திட்டம் நதிகள் ஓடி கடலில் கலப்பது வீணானது என்ற பாமரத்தனமான அடிமுட்டாள்தனமான கருத்தியலிருந்தே உருவானது. மேலும், எதையுமே லாப நோக்கில் சிந்திப்பது என்ற முதலாளித்துவ பார்வையுடனே இது பிறப்பெடுத்துள்ளது. முதலில் இந்தத் திட்டம் குறித்தும் பின்னர் நீர்நிலைகளின் இயல்பை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் காண்போம்.
நதிகளின் இணைப்பு
நதிகள் இணைப்பு என்பது கங்கை - காவிரி என்ற இரு பெரு நதிகளை இணைக்கும் பழைய திட்டமல்ல. நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் 37 சிறிய பெரிய நதிகளை இணைக்கும் திட்டமாகும். இமாலய நதிகள் (Himalayan Rivers ) மற்றும் தீபகற்ப நதிகள் (Peninsular Rivers) என இரு பெரும் இணைப்புகள். அத்துடன் மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்டத்தையும் நிறுவுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.. நதிகளை இணைப்பது என்பது நாடு முழுவதும் நதிகளை ஒன்றோடு ஒன்றை இணைப்பது, அதற்காக கால்வாய்களைக் கட்டுவதும் அணைகளையும் பாலங்களையும் கட்டுவதும் என மிக பிரமாண்டமான திட்டமாகும். உதாரணமாக பிரம்மபுத்திரா நதியை மகாநதியுடன் இணைப்பதும் இதில் அடங்கும்.
தீபகற்ப நதிகள் இணைப்பில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை முக்கிய நதிகளாகும். மேற்கே அரபிக் கடலில் கலக்கும் நதிகளையும் கிழக்கே வங்காள விரிகுடா கடலில் கலக்கும் நதிகளுடன் இணைப்பதும் ஆகும்.
மலைக்கவைக்கும் செலவு!

திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5,60,000 கோடிகளாகும். இதில் இமாலய நதிகள் இணைப்புக்கு ரூ.1,85,000 கோடிகள் என்றும் தீபகர்ப்ப நதிகள் இணைப்புக்கு ரூ.1,60,000 கோடிகள் என்றும் நீர்மின் திட்டத்திற்கு ரூ.2,69,000 கோடிகள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவுத் தொகை 10 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பீடாகும். திட்டக் காலம், திட்டம் தொடங்கியதிலிருந்து 20 ஆண்டுக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதனால் திட்டம் முடிக்கப்படும்போது உள்ள இந்திய நாணய மதிப்பின்படி எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது. இவ்வளவு பெரிய தொகையானது அந்நியக் கடனாகவோ அல்லது கார்ப்பரேட்டுகளிடமிருந்தோ பெறப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. வழக்கம் போலவே திட்டம் முழுமையும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு விடப்படும். கடன் வாங்கினால் அதற்கான வட்டித்தொகையானது மக்கள் தலை மீதே வந்து இறங்கும். இதில் என்ன வேடிக்கை என்றால் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்படவேயில்லை. இதைத் தவிர சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு குறித்தும் மௌனமே சாதிக்கப்படுகிறது. இந்த இரு ஆய்வுகளுமே சாத்தியமா என்பதே தெரியவில்லை.
நாடே சொர்க்கமாகிவிடுமா?
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து நாடே சொர்க்கமாகிவிடும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. ஆக, இந்தத் திட்டத்தை வைத்து ஒருவரின் தேச பக்தியை அளவிடும் அளவுக்குச் சென்று விட்டது.
கடலில் கலக்கும் நதிநீரை குறுக்கே அணை கட்டி கால்வாய்களின் மூலம் திருப்பி விடப்போகிறார்கள். இதில் ஏராளமான கிராமங்கள் அழிந்து விடும். லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் சொந்த கிராமங்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் விரட்டி அடிக்கப்படுவார்கள். ஏற்கெனவே இந்தியாவில் சுதந்திரமடைந்ததிலிருந்து கட்டப்பட்ட வைகை அணை, சரோவர் அணை போன்ற எண்ணற்ற அணைகள் கட்டியதால் சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. இது போன்ற சூழ்நிலை நிலவும் நாட்டில் வெளியேற்றப்படும் மக்களுக்கு என்ன தீர்வு?
ஆறுகள் வறண்டு போகும்
இணைக்கப்படும் நதிகள், ஆறுகள் தாங்கள் இதுவரை இருந்துவந்த இடத்திலிருந்து வேறுவிதமான தட்பவெப்ப நிலைக்கு மாற்றப்படுவதால் அவை முற்றிலும் வறண்டு போக வாய்ப்புண்டு. நதிகள் ஓடும் வழிகளில் அவற்றைச் சார்ந்திருக்கும் விவசாயப் பயிர்களும் எண்ணற்ற நுண்ணுயிர்கள் உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக்கமும் அழிந்து விடும். நதிகளை அடிப்படையாகக் கொண்ட தட்பவெப்ப நிலையும் மாறிவிடுவதால் புதிய நோய்களும் பரவும். இவையெல்லாம் கற்பனையல்ல. உலக வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள ஏரல் என்ற ஒரு கடலே வற்றிப்போனது. பல நாடுகளில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளைக் காண்போம்.
இர்டிஸ் காரகண்டா (சட்பேஸ்) கால்வாய்
இர்டிஸ் நதியும் அதன் துணை நதிகளும்தான் கஜகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரம். ஆசியாவின் நீண்ட நதியான இர்டிஸ் 4,264 கிமீ உடையது. சீனாவில் (டங்கோலியா) உருவாகி கஜகஸ்தானில் பாய்ந்து ஜெய்சன் ஏரியில் கலக்கிறது இதிலிருந்து 450 கிமீ தூரமுள்ள நூர என்ற பகுதியின் பாசனப் பகுதியை அதிகரிப்பதற்காக இர்டிஸ் நதியின் நீர் திருப்பி விடப்பட்டது. அதற்காக 458 கிமீ நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டது. 14 அணைகள்,17 பாலங்கள், 524 கிமீ சாலை, 703 கிமீ கால்வாய்கள் அமைக்கப்பட்டன. 450 மீட்டர் உயரமுள்ள அணையைக் கடக்க 22 நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
விவசாயம், நகராட்சி மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நீர் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அது நிறைவேறவில்லை. இடப்பெயர்ச்சி ஏற்பட்டதாலும் தட்பவெப்ப நிலை மாறியதாலும் 220 மில்லி கன லிட்டர் நீர் ஆவியாகிப் போனது.
கிடைத்த நீரும் தாறுமாறாகப் பயன்படுத்தப்பட்டது. நீர் பயன்படுத்துவதிலும் சிக்கன முறையும் நீர் மேலாண்மையும் கடைப்பிடிக்கப்படவில்லை. பின்னர் நூர பாதரக் கழிவால் மாசுபட்டுப் போனது. இதைத் தொடர்ந்து நீர் பயன்பாடும் குறைந்தது போனது. நீரேற்றும் கால்வாய்கள் தற்போது முழுமையாகப் பயனற்று வறண்டு கிடக்கின்றன.
ஜிஏபி - துருக்கி
யூப்ரடீஸ் டைகரிஸ் நதிகள் நாட்டின் வடகிழக்கு பகுதியான அனடோலியாவில் உருவாகி சிரியா, இராக் வழியாக பாரசீக வளைகுடாவில் கலக்கிறது. இந்த நதிகளின் மொத்த நீரோட்டத்தில் முறையே 89 விழுக்காட்டை அளிப்பதால் 52 மற்றும் 141 விழுக்காடு நீரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை உண்டு என துருக்கி அரசு கருதியது. இதற்காக ஏபி திட்டம் என்றழைக்கப்படுகின்ற தென்கிழக்கு அனடோலன் திட்டமானது (South Eastern Anatolian Project) உருவாக்கப்பட்டது. ஜிஏபி திட்டத்தின் ஒரு பகுதியாக இரு நதிகளின் மீதும் தலா ஆறு கட்டுமானத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. 22 பெரிய அணைக்கட்டுகளும் 19 நீர்மின் திட்டங்களும் இதில் அடக்கம். 17 ஹெக்டேருக்கு 7,476 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது (1997ஆம் ஆண்டின்) இருந்த திட்டத்தின் மதிப்பீடு 32 மில்லியன் டாலர் ஆகும். திட்டமானது 2005இல் முடிவடையும் என மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டம் முடிவடையும்போது நாட்டின் 20 விழுக்காடு பாசனப்பகுதி திட்டத்தின் கீழ் வரும் எனவும் 22 விழுக்காடு மின்சாரம் கிடைக்கும் எனவும் கணக்கிடப்பட்டது. ஆனால், எதிர்மாறாகவே நடந்தது. 1990இல் இருந்து துருக்கி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காட்டைச் செலவழித்து வருகிறது. பாதிக்கும் மேலான நிதி செலவழிக்கப்பட்டு விட்டது. திட்டத்தின் கால நிர்ணயத்தைத் தாண்டியும் 14 ஆண்டுகளாகி விட்டன தற்போது திட்டம் ஓரளவுக்கு முடிக்கப்பட்டு விட்டது. ஆனால். புதிதாகப் பாசனம் அளிக்கப்பட்ட ஒவ்வொரு 3 ஹெக்டேர் நிலங்களில் ஒரு ஹெக்டேர் நிலமானது உவர் தன்மையால் பாதிக்கப்பட்டு விட்டது. தற்போது பாசனத்துக்கு நீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நீரின் உவர் தன்மையினாலும் மாசு கலந்ததாலும் அப்பகுதியில் நோய்கள் பரவிக்கொண்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சீனாவின் அனுபவம்

சீனத்தின் வடக்கு பகுதி நீர் வளம் இல்லாமல் எப்போதுமே வறண்டு போய் இருக்கும். இந்த பகுதியில்தான் சீனத்தின் தலைநகரான பீஜிங்கும் உள்ளது. அதே சமயத்தில் சீனத்தின் தெற்கு பகுதியில் ஏராளமான நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகள் ஓடி, கடலில் வீணாகக் கலப்பதாகக் கருத்துகள் கூறப்பட்டதால் தெற்கின் நீர்வளத்தை வடக்குக்கு மாற்ற திட்டம் வகுக்கப்பட்டது.. இந்தத் திட்டமானது 1952இல் அன்றைய சீனத் தலைவர் மாவோவினால் வழிமொழியப்பட்டது. 2030த்துக்குள் இத்திட்டம் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. திட்டத்தின் அப்போதைய உத்தேச செலவு 59 பில்லியன் டாலர். ஒரு கன மீட்டர் நீரைக் கொண்டு செல்லச் சராசரியாக 12 டாலர் செலவாகும் என்பது மதிப்பீடாகும்.
இந்தத் திட்டம் உலகிலேயே மிகப் பெரிய திட்டமாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு 45 கியூபிக் மீட்டர் நீரைக் கொண்டுசெல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தெற்கின் நீர்வளத்தை முழுமையாக அழிக்கும் நடவடிக்கை என்றும் இதனால் இந்த நீராதாரத்தைச் சார்ந்திருக்கும் பெரிய உயிர்ச்சூழல் அழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செலவின் அடிப்படையில் பார்க்கும்போது மாற்றப்படும் நீரானது தொழிற்சாலைகள் விலை கொடுத்து வாங்குவதாகவே முடியும். எளிய மக்கள் பயன்படுத்த முடியாது என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொலோராடா (கலிபோர்னியா)
கலிபோர்னியாவில் கட்டுப்படுத்த முடியாமல் தங்கு தடையின்றி பாய்ந்து கொண்டிருந்த மிகப் பெரிய நதி கொலோராடா. 19ஆம் நூற்றாண்டில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டு நீரோட்டத்தைத் தடுத்துத் தேக்கின. இதனால் நதி கடலை சேர முடியாமல் தடுக்கப்பட்டது. முகத்துவாரத்தில் நீரை நிரப்புவதற்குப் பதிலாக உப்பை நிரப்பிக்கொண்டிருக்கிறது. முகத்துவாரத்தில் வளரும் புயல் காக்கும் கேடயங்களாகத் திகழும் அலையாத்திக் காடுகள் அழிந்து விட்டன. இறால், நண்டு போன்ற மீன் இனங்கள் அழிந்து விட்டன. தற்போது அங்கு எந்த உயிரினமும் இல்லை.

இந்தத் திட்டங்கள் நதிகளின் தற்கொலையில்தான் முடியும். இதில் கடலும் விதி விலக்கல்ல. கடலே காணாமல் போன வரலாற்றை அடுத்த பகுதியில் காண்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக