நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்!

சேது ராமலிங்கம்
நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்?
இயற்கையின் இயக்க விதி
நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவாழ் உயிரினங்களுக்கும் நதிகள் கடலில் கலப்பதே அடிப்படை ஆதாரம். கடலுக்கான சத்துகளும் நதிகள் மூலமாகவே கிடைக்கின்றன.
உலகம் முழுவதும் கடல் என்ற மிகப்பெரிய இயற்கைச் சூழல் அமைப்பின் இயக்க விதி இதுதான். இந்த விதியை மாற்றி அமைத்தால் கடல் மரணமடையும். கடலே காணாமல் போகும். உலக வரலாற்றில் இதுதான் நடந்துள்ளது. ரஷ்யாவில் ஏரல் கடலுக்கு நேர்ந்த கதிதான் நடக்கும்.
ஏரல் என்பது மிகவும் தொன்மையான கடலாகும். அது மூன்று புறமும் பாலைவனங்களால் சூழப்பட்டிருந்தது. சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவில் இணைந்திருந்த ஐந்து குடியரசுகளையும் ஏரல் கடல் இணைத்திருந்தது. அமுதாரியா, சிர்தாரியா ஆகிய இரு நதிகளே ஏரல் கடலில் சங்கமித்து வந்தன. இதற்கு அடுத்தபடியாக தஜிக்கிஸ்தானிலும் கிஜிக்கிஸ்தானிலும் உள்ள பமிர் என்றும் தியென்ஷான் என்ற பெயர்களிலுள்ள மலைகளிலிருந்த பனிக்கட்டிகள் உருகியும் ஏரல் கடலில் கலந்து வந்தன. இதனால் ஏரல் தனது உவர் தன்மையையும் அதே சமயத்தில் நதிகளும் பனிக்கட்டிகளும் உருகி உருட்டிவரும் எண்ணற்ற கனிமங்களின் மூலம் உருவாகும் வேதியல் தன்மையையும் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஏரல் கடலானது வெப்பத்தினால் நீராவி ஆவதும், அது பின்னர் மழை பொழிவாகி கடலில் கலப்பதுமான நீர் சுழற்சியானது அந்தப் பகுதியில் தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் சில மாற்றங்களைக் கொண்டிருந்தது.
இந்தியப் பெருங்கடலிலிருந்து வரும் பருவக்காற்றை இமயமலை தடுத்துவிடுவதால் அந்தப் பகுதியில் குறைவான மழைப்பொழிவே இருந்துவந்தது. இதன் விளைவாக அதிகமான தட்பவெப்ப நிலையும் குறைவான ஈரப்பதம் உள்ள காற்றும் கொளுத்தும் வெயிலுமாக அந்தப் பகுதியின் நிலை இருந்தது. அதனால் மிக விரைவில் நீர் ஆவியாகும் போக்கு இருந்து வந்தது. ஏரலில் கலக்கும் அமுதாரியா, சிர்தாரியா நதிகளின் மூலம் 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்தப் பகுதியில் நீர்ப் பாசனமும் விவசாயமும் மேற்கொள்ளப்பட்டுவந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பகுதியில் அகழ்வு செய்த சான்றுகள் மூலம் இரண்டு நதிகளுக்கு இடையில் பெருமளவிலான நிலம், நீர்ப்பாசன வசதியுடன் இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீர் மேலாண்மை உள்ளூர் கிராம மக்களிடம் இருந்ததால் நீர்ப் பாசனத்துக்கும் நதிகள் கடலில் சென்று கலப்பதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தது ஆபத்து. ரஷ்யா துருக்கிஸ்தானிலுள்ள கானேட்ஸ் என்ற பகுதியைக் கைப்பற்றியது. ரஷ்ய அரசு அந்தப் பகுதியிலுள்ள நிலங்களில் பருத்தியைப் பயிரிட்டு நீர்ப்பாசன முறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
நதிகளைத் தடுத்து நிறுத்தி…

இதன் பின்னர் ரஷ்யாவில் புரட்சி நடைபெற்று அந்தப் பகுதிகள் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் நீர்ப்பாசனத்தில் மாற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இரு நதிகளும் கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, அவை பருத்தி விவசாயத்துக்கு முழுமையான அளவில் திருப்பி விடப்பட்டன. இதனால் ஏரல் கடல் சுருங்கி வற்றிவிடும் என்பதை சோவியத் நிபுணர்கள் அறிந்திருந்தனர். இதைச் சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால், அவை எதுவும் கைகொடுக்கவில்லை. அது மட்டுமின்றி, அந்த ஏற்பாடுகள் படிப்படியாகக் கைவிடப்பட்டன.
இதன் விளைவாக சிர்தாரியாவிலிருந்து நீர் படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1970களில் நீர்வரத்து பூஜ்யமாகிவிட்டது. மற்றொரு நதியான அமுதாரியாவிலிருந்து நீர்வரத்து 1980களில் நின்றுவிட்டது. 1950கள் வரை 53 மீட்டராக இருந்த கடல் மட்டம், நீர்வரத்து இல்லாததால் 12 மீட்டருக்குக் கீழே குறைந்து, பாதிக் கடலின் பரப்பளவு வெளியே தெரிந்தது. ஏரல் கடற்கரை மிகவும் விரிவடைந்தது. சில இடங்களில் கடற்கரையானது 120 கிமீ வரை இருந்தது. ஏரல் கடலைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்திருந்த ஏறக்குறைய 30 லட்சம் மக்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகினர்.
அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மட்டும் இழக்கவில்லை. கடுமையாக நஞ்சாகிப்போன கடலையும் கடற்கரையும் எதிர்கொண்டனர். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பருத்தி பயிரிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் கடலில் கலந்ததாகும்.
நஞ்சான கடலும் கடற்கரையும்

பருத்திக்காகக் கடலில் கலக்கும் நதி நீரைத் தடுத்து ஒரு ஹெக்டேருக்கு 18,700 கனஅடி நீர் எடுக்கப்பட்டது. அந்த நீரில் உவர் தன்மையானது அதிகமாக இருந்தது. இந்தப் பாசன நீரானது நிலத்தில் பயன்படுத்தப்பட்டுக் கழிவாகக் கடலில் கலந்ததால் அதிகமான நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கடலும் கடல் நிலமும் ஆயின. 1980களின் இறுதியில் ஏறக்குறைய 3 கனஅடி நீர் ரசாயன கழிவுகளுடன் உஸ்பெக், துர்க்மெனி ஆகிய பகுதிகளிலிருந்த நிலங்களிலிருந்து அமுதாரியாவில் கலந்து இறுதியாக ஏரல் கடலில் கலந்தது.
ஏரல் கடல் சுருங்கவும் வற்றவும் தொடங்கிய பின்னர் மீன்பிடிப்பும் கப்பல் போக்குவரத்தும் கப்பல் மற்றும் படகு கட்டும் கட்டுமானத் தொழிற்சாலைகள் நின்று போயின. 1950களிலிருந்து தொடங்கி மீன்பிடிப்பு நின்று போனதால் ஏரல் மண்டலத்தில் மட்டும் 60,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் தலைமையிலான தவறான கொள்கைகளால் மிக அதிகமான வேலை இழப்பு ஏற்பட்ட பகுதியாக கஜக்கிஸ்தான் இருந்தது. அங்கு சராசரியாக 17.5 விழுக்காடு வேலை இழப்பு ஏற்பட்டது. அதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்ததால் குடிப்பழக்கத்துக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாவதும் அதன் தொடர்ச்சியாகக் குற்றச் செயல்களும் அதிகரித்தன. இவற்றினால் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக இருந்த பாரம்பரிய தொழில்களும் வாழ்க்கை பண்பாட்டு முறைகளும் அடியோடு அழியத் தொடங்கின.
உணவுப் பற்றாக்குறையும் பாதுகாப்பான குடிநீரும் ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழலும் நிலவியதால் பெரிய அளவிலான நோய்கள் பரவி மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது. பின்னர் ஏரல் கடல் வற்றிக் காணாமல் போனது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட இது தொடர்பான ஆராய்ச்சிகள் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன.
சோக வரலாறு
1982இல் இருந்து 1992 வரை மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான ஓரல் அட்டானியசோவா என்பவர் மேற்கொண்ட ஆய்வுகளில் ஏரல் கடல் வற்றியதால் அந்தப் பகுதிகளில் அதிகமான அளவில் சத்துக் குறைபாடும், மகப்பேறு மரணங்களும், சிறுநீரகக் கோளாறுகளும், கல்லீரல் கோளாறுகளும் மக்கள் மத்தியில் பரவிவந்தது கண்டறியப்பட்டது.
இன்று ஏரல் கடல் இருந்த இடமே தெரியாமல் பாலைவனமாக நிற்கிறது. அதன் சோக வரலாறு மனிதகுலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. குறிப்பாக, நதிநீர் இணைப்பு பற்றிப் பேசுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.
துணை நின்றவை:
1. Ecologist,vol.6 no-5 sep.,1998. Towards Political Ecology of Water in South Asia : Mapping Hydro-Social Complexity by John Mic Sweeney.
2. Linking Rivers Cost of the behemoth by Neil Pelkey , THE HINDU SURVEY OF THE ENVIRONMENT,2003.p31-38
3. Linking Rivers,Hydraulic Suicide,Rohan D’Souza, THE HINDU SURVEY OF THE ENVIRONMENT,2003.p25-30
4. Linking Rivers,Ramasamy R.Iyer,Economic and Political Weekly March 1,2003,p.913-915
5. தண்ணீர் தேவை ஒரு முழுமையான கொள்கை - சேது, நீர்வளப் பாதுகாப்பு கமிட்டி மற்றும் கடலோரச் செயல்பாட்டுக் குழு வெளியீடு.
கருத்துகள்
கருத்துரையிடுக