முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறிவேப்பிலைகள்!

இடம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி கிராமத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒரு வீட்டில் பெரியசாமி (70), அவரது மனைவி புஷ்பவள்ளி (60) இருவரும் கருகிக்கிடந்ததாக செய்திகள் வெளியாகின. செய்தி நாளேடுகளில் செய்தியாக வந்ததன் பின்னணியில் ஒரு சோகமான வரலாறு பொதிந்துள்ளது யாருக்கும் தெரியாது.
அவமானம் என்னும் ஆயுதம்
அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அவர்கள் அனைவரையும் படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்துவிட்டார். அவருக்கு பராலிட்டிக் ஸ்ட்ரோக் எனப்படும் முடக்குவாதம் வந்துவிட்டது. இனி எந்த வேலையும் செய்ய முடியாத நிலை. புஷ்பவள்ளிக்கோ சொரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி. மூத்த மகன் வெளிநாடு சென்றுவிட்டார். மருமகளோ இருவரையும் மதிக்கவே மாட்டார். இன்னொரு மகனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை. அவரது வீட்டில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டனர். அப்படிச் செய்தால்தான் இவர்களாக வெளியேறுவார்கள் என்ற தந்திரத்தை மகன் வீட்டார் கடைப்பிடித்தனர்.
சொரியாசிசைக் காரணம் காட்டி அவரைக் காணத் தகாதவராக நடத்தியது போன்ற எண்ணற்ற அவமரியாதைகள் நடந்தன. இதனால் மனம் நொந்து அவர்கள் இருவரும் ஒரு முறை விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்றார்கள். ஆனால், அண்டை வீட்டார்கள் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால் 3 நாட்களுக்கு முன்னதாக வீட்டில் யாரும் இல்லாததால் தங்கள் மேல் தாங்களே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துவிட்டனர். கருகிய நிலையில் கணவரின் காலைப் பிடித்துக்கொண்டு புஷ்பவள்ளி கிடந்த காட்சி யாரையும் கலங்க வைத்துவிடும்.
https://minnambalam.com/archive/2018/05/31/26a.jpg
துரத்தி அடித்த அலட்சியம்
இன்னொரு சம்பவம். இது நடந்த இடம் நாகப்பட்டினம், வெளிப்பாளையம்
நாராயணனுக்கு 65 வயதாகிறது. ஆச்சாரமான குடும்பம். எளிமையான கீழ் நடுத்தர வர்க்க வாழ்க்கை. வக்கீல் குமாஸ்தாவாக இருந்த அவர் மிகுந்த சிரமப்பட்டு தனது ஒரே மகனைக் கணிப்பொறி பட்டதாரி ஆக்கினார். மகன் பள்ளியில் படிக்கும்போதே மனைவி இறந்துவிட்டார். அவருடைய உலகமே மகனாக இருந்தது. மகனுக்குப் பெரிய ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. அவனுக்கு மனைவியானவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பமாகின. ஒரு வாரத்திலேயே உணவு அளிப்பதில் பாகுபாடு ஆரம்பித்தது. காலை உணவே 10 மணிக்கு மேல்தான் அவருக்கு அளிக்கப்படும். ஆறிப்போன பிய்ந்துபோன உதிரி இட்லிகள். சில சமயம் அதுவும் கிடைக்காது. அதுவும் அந்தத் தட்டு வைக்கப்படும் தொனியிலேயே அவர் அலட்சியப்படுத்தப்படுவதை உணர்வார்.
ஒரு முறை பசி பொறுக்க மாட்டாமல் சீக்கிரமே காலை உணவு கேட்டுள்ளார். அதுவும் 9 மணிக்குத்தான். மறுநாளே அவருடைய பையன் அவரிடம் பேசினான்; அப்பா இனிமேல் இங்கு வர வேண்டாம் என்றான். ஏன் என்று கேட்கிறார். இனிமேல் உன்னிடம் மரியாதையாகப் பேச முடியாது என்று கூறிவிடுகிறான். இதைக் கேட்டு மனம் நொந்தவர் எதுவும் பேசவில்லை.
சில நாட்களிலேயே அவர் கடலிலிருந்து மீனவர்களால் பிணமாக மீட்கப்பட்டார். தாங்கள் கத்திக் கூப்பாடு போட்டு அவரைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் கடலில் இறங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
https://minnambalam.com/archive/2018/05/31/26b.jpg
அமிலச் சொற்கள்
போய்த் தொலைய மாட்டேங்குது, சும்மா இருக்க மாட்டியா, பெருசு, சும்மாதானே இருக்கீங்க, இந்தக் கடைக்கு போய்ட்டு வாங்க, போன் பில்கூட நாங்கதான் கட்டணுமா, நீங்க என்ன செய்றீங்க
இதெல்லாம் மகன்களையும் மகள்களையும் அரும்பாடு பட்டு வளர்த்த பெற்றோர்கள் முதியோர்களான பிறகு எதிர்கொள்ளும் அவமரியாதைகள், உதாசீனங்கள்.
பல குடும்பங்களில் வேலைக்காரர்களுக்குப் பதிலாகப் பெற்றோர்கள் இருப்பார்கள், சம்பளம் வாங்காத குழந்தை வளர்ப்புக்கான ஆயாக்களாக இருப்பார்கள், வீட்டைப் பார்த்துக்கொள்ளும் வாட்ச்மேன்களாக வீட்டைக் காப்பார்கள்.
முதுமையில் கொடுமை
இதுதான் முதியோர்களின் நிலைமை. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடனே அவர்களின் நரக வாழ்வு தொடங்கிவிடுகிறது. ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடனே ஏற்படும் மன அழுத்தம், சமூக அங்கீகார இழப்பு ஆகியவற்றுடன் குடும்பத்தி்ற்குள் மகன்களைச் சார்ந்து வாழ்வதிலிருந்து அலட்சியப்படுத்துதல் தொடங்குகிறது. பல குடும்பங்களில் மருத்துவச் செலவுகளுக்குக்கூட பெற்றோருக்குப் பணம் அளிப்பதில்லை. பணம் கேட்டால் உனக்குச் சாப்பாடு போடுவதே பெரிய விஷயம், இது வேறயா என்று திட்டுவார்களோ என்று அஞ்சும் முதியோர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.
வசதியானவர்களாக இருந்தால் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவார்கள். பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து சொந்தபந்தங்களிலிருந்தும் வேரோடு பிடுங்கி அனாதைகளாக முதியோர் இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள். வசதியற்றவர்களாக இருந்தால் அவமானங்களைப் பொறுக்க முடியாமல்போகும்போதும் மகனே தங்களைச் சுமையாகக் கருதும்போதும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
https://minnambalam.com/archive/2018/05/31/26c.jpg
மனித உரிமை மீறல்கள்
ஏஜ்வெல் பவுண்டேஷன் என்ற ஐநாவின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் இந்தியாவில் முதியோர் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், இந்தியாவில் ஏறத்தாழ ஒரு கோடிப் போ் முதியோர்கள். இது 2025இல் 324 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 65 விழுக்காடு முதியோர் ஏழைகள். அவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. 35 விழுக்காடு முதியோருக்குச் சொத்துகள், முதலீடுகள், சேமிப்புகள், பணம் ஆகிய வசதிகள் உள்ளன. மீதிப் பேருக்கு அதெல்லாம் இல்லை. அத்தகைய ஏழை முதியோர்களின் நிலைதான் மிகவும் மோசம்.
ஆனால், முதியோரின் பொருளாதார அந்தஸ்து எப்படி இருந்தாலும் பெரும்பாலான முதியோர்கள் முறைகேடாகவே நடத்தப்படுகிறார்கள். முதியோர் எதிர்கொள்ளும் மனித உரிமைகளாக ஆய்வில் தெரியவந்தவை;-
உணவு, மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள் ஆகிய அடிப்படைத் தேவைகளை மறுப்பது போன்றவற்றை 13 விழுக்காடு முதியவர்கள் எதிர்கொள்கின்றனர்.
உடல் மீதான வன்முறை (அவர்களை அடித்து உதைப்பது), பேரக் குழந்தைகள், வெளி நபர்கள், நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என யாரையும் சந்திக்க விடாமல் தடுப்பது, சில சமயங்களில் கட்டிப்போட்டு வைப்பது, வீட்டு வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை வைத்து பிளாக்மெயில் செய்வது, அவர்களின் அன்றாடத் தேவைகளான துாய்மையான குடிநீர், நல்ல உணவு ஆகியவற்றை மறுப்பது, அவர்களின் உடைமைகளையும் சேமிப்புகளையும், பத்திரங்கள் போன்ற சட்ட ஆவணங்களையும் பறி்த்துக்கொள்ளுதல் போன்ற மனித உரிமை மீறல்களை 37 விழுக்காடு முதியோர்கள் எதிர்கொள்கின்றனர்.
13 விழுக்காடு முதியோர்கள் அன்றாடம் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
https://minnambalam.com/archive/2018/05/31/26d.jpg
விதவைகளின் நிலை
இதில் பெண்கள் படும் பாடு இன்னும் மோசமானது. பாலியல் பாகுபாட்டுடன் அடிக்கப்படுவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. அவர்கள் நான்கு சுவர்களுக்குள் அவமானங்களுடன் அனைத்தையும் தாங்கிக்கொண்டு பொறுமையாகவும் அளவற்ற சகிப்புத்தன்மையுடனும் வாழ்க்கையின் கடைசிக் காலத்தைக் கழிக்க வேண்டும். விதவைகளாக இருந்தால் நரக வாழ்வுதான் காத்திருக்கும்.
சமூக மாற்றங்கள்
இந்த நிலை ஏற்படுவதற்கான சமூக மாற்றங்கள் புரிந்துகொள்ளக்கூடியவையே. நாடு சுதந்திரமடைந்ததில் அரசியல் அதிகாரம்தான் மாறியதே தவிர சமூக மாற்றங்கள் பெரிதாக நடைபெறவில்லை. சாதி, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள், கிராமங்கள்தோறும் நிலவிய பிரபுத்துவம், அதன் எல்லையற்ற அதிகாரங்கள் ஆகியவை அப்படியே நீடித்தன. நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒரு பகுதியாகவே கூட்டுக் குடும்ப அமைப்பும் இருந்தது.
கூட்டுக் குடும்ப அமைப்பில் சுதந்திரமின்மை, அந்தரங்கமின்மை போன்ற எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும் அக்குடும்ப அமைப்பில் மனிதாபிமான உணர்வுகள் இல்லாமல் இல்லை.
நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தன்மைகளான போலியான வம்ச கௌரவம், குலப்பெருமை, தனி மனித வழிபாடு, இவற்றுடன் பிரிக்க முடியாத அம்சமாகவே தயாள குணம் இருந்தது. மன்னர்களும் பிரபுக்களும் அந்தச் சமூகத்தின் குடும்பங்களும் தங்களது பெருமைக்காக ஊதாரித்தனமான தயாளத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. அந்தத் தயாளமே சமூகத்தில் முதியோர்களையும் ஆதரவற்றவர்களையும் காப்பாற்றிவந்தது.
கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பு முதியோர்களைக் கைவிடவில்லை. அவர்கள் படுத்த படுக்கையிலிருந்தாலும் வைத்துப் பராமரித்தது. அது மட்டுமின்றி விதவைகள், மனநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களையும் கைவிடாமல் அது ஆதரவளித்தது.
ஆனால் மூலதனத்தின் வீச்சால் கூட்டுக் குடும்ப அமைப்பு மட்டுமல்ல, அனைத்துச் சமூக அமைப்புகளும் சிதையத் தொடங்கின. இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளைப் போன்று புரட்சியின் மூலம் நிலப்பிரபுத்துவச் சமூகம் ஒழிக்கப்பட்டு நவீன முதலாளித்துவச் சமூகம் உருவாக்கப்படவில்லை. இங்கு பிரஷ்யன் ஜங்கர் பாணியில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையையும் சமூகத்தையும் மாற்ற முயற்சிகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றன. பிரஷ்யன் ஜங்கர் பாணி என்றால் நிலவுடைமைச் சமூகத்தை அடியோடு புரட்சியின் மூலம் மாற்றாமல் அந்தச் சமூகத்தின் தோள் மீது கைபோட்டு சமரச முறையில் மெது மெதுவாக மாற்றும் முறையாகும். இப்படிப்பட்ட சமரச முறையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் நிலவிவந்த நிலவுடைமை சமூகத்தை மாற்றுவது என்பது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புத் தொழில் பிரிவினருக்கும் கொடிய வேதனை அளிப்பதாகும்.
விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தூக்கி எறியப்பட்டனர். சமூக அமைப்புகளும் உறவுகளும் சிதையத் தொடங்கின. அதுதான் கூட்டுக் குடும்ப அமைப்பிலும் நடந்தது. பணிக்காகப் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை. அதனால் பெற்றோர்களைக் கூட்டிச்செல்ல முடியாத நிலை. அவர்களை விட்டும் செல்ல முடியாது. இதேபோல் மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகள் உள்ளிட்ட நிர்க்கதியாக விடப்பட்டவர்கள் பலர் எண்ணற்ற துயரங்களை எதிர்கொண்டனர். பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்தன. இந்த அவலம்தான் முதலாளித்துவம் ஏற்படுத்திய மாபெரும் மனித குலத் துயரமாகும். இந்தப் பின்னணிதான் முதியோர்களைப் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறியும் நிலையை உருவாக்கியுள்ளது.
நுகர்வுக் கலாச்சாரமும் ஆடம்பரக் கலாச்சாரமும் உலகமயமாக்கல் கொள்கைகளும் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. முதியோர்கள் தேவையற்றவா்களாகிப்போனார்கள். இளைய தலைமுறையினர் அவர்களைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. முதியோர்களால் புரிந்துகொள்ள முடியாத தகவல் தொழில்நுட்பமும் இந்த இடைவெளியை அதிகப்படுத்தியது.
பணி ஓய்வு, இனி சம்பாதிக்க முடியாதது, அடிக்கடி வரும் உடல்நலக்குறைவு, பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தனிமையில் வாடுதல், தொடர்ந்த புறக்கணிப்புகள், உதாசீனப்படுத்துதல்கள் போன்றவை மேலும் முதியோர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிவருகின்றன.
முதியோர்களின் அனுபவத்தையோ அறிவையோ பயன்படுத்த வாய்ப்புகளை உருவாக்காமல் லாப நோக்கத்திலேயே அவர்களை அணுகும் முதலாளியச் சமூகத்திடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் இளைய தலைமுறையினரில் சிலர் முதியோர்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். முதியோரின் உரிமைகளுக்காகப் போராடவும் தொடங்கியுள்ளனர். இனிமேலும் அவர்களை மனிதநேயத்தோடு அணுகுவோம். குறைந்தபட்சம் அவர்களிடம் அடிக்கடி உரையாடுவோம். அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா? தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹாஃப்வே ஹோம்ஸ் மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நா...
வீடியோ கேம் கள் -- ஒருவித மனநோய் வீடியோ கேம்களுக்கு அடிமையாகுதலை ஒருவித மனநோய் என உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது . இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிப் பல ஆண்டுகளாகச் சமூக , மருத்துவ தளங்களில் விவாதம் நடந்துவந்த நிலையில் உலகச் சுகாதார அமைப்பு , இது மனநோய்க்கு இட்டுச்செல்லக் கூடும் என எச்சரித்துள்ளது . இந்த அறிவிப்பு வீடியோ விளையாட்டுகள் என்னும் மெய்நிகர் உலகில் புழங்குவதால் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த கவனத்தைப் புதுப்பித்துள்ளது . மாய உலகில் நம்மை உலவச்செய்யும் இந்த விளையாட்டைப் பற்றிப் பார்க்குமுன் , இதுபோன்ற விளையாட்டுகள் உளவியல் ரீதியாக நம்மை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பார்ப்போம் . வீடியோ விளையாட்டின் உளவியல் அம்சங்கள் ஒரு திரைப்படம் அல்லது கலைப் படைப்பு ரசிக்கப்படும் உளவியலிருந்து தொடங்குவோம் . திரைப்படம் தொடங்கும்போது பார்வையாளர்களின் அடையாளப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு தொடங்குகிறது . படைப்புடன் பார்வையாளரின் அடையாளப்படுத்திக்கொள்வது (identification) இல்லைய...
நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்! சேது ராமலிங்கம் நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்? இயற்கையின் இயக்க விதி நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவா...