முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு!

நீலப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக சாகர் மாலா என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொண்டுவந்த திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமே சாகர் மாலா. கடந்த 2003இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் ஆட்சியின்போது இத்திட்டமானது முன்மொழியப்பட்டது. சாகர் மாலா திட்டத்தை அமல்படுத்திட அது வளர்ச்சி கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.
சரக்குப் போக்குவரத்து குறைவு
8,139 கிமீ நீளமுள்ள இந்தியக் கடற்கரையையும் 14,500 கி்மீ நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகளையும் சரக்குப் போக்குவரத்துக்கானதாக மட்டும் முழுமையானதாக மாற்றும் திட்டமே சாகர் மாலா. ஏனென்றால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்தானது மிகவும் குறைவாக உள்ளதாக அரசு காரணம் கூறியுள்ளது.
சீனாவின் துறைமுகங்கள் சரக்குப் போக்குவரத்தின் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பாக 24 விழுக்காடும், அமெரிக்காவின் பங்களிப்பு 7 விழுக்காடும், நெதர்லாந்து 42 பங்களிப்பும் அளிக்கின்றன. இந்தியாவின் துறைமுகங்களின் பங்களிப்பு 0.3 விழுக்காடே உள்ளது. மேலும், சாலை சரக்குப் போக்குவரத்து 6 விழுக்காடும் ரயில் சரக்குப் போக்குவரத்து 9 விழுக்காடும் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கப்படுகிறது. எனவே, சரக்குப் போக்குவரத்தை அதிகரிப்பதற்காகவே இத்திட்டமானது அமல்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கடந்த 2016இல் வெளியிடப்பட்ட சாகர் மாலா குறித்த தேசியக் கண்ணோட்ட ஆவணத்தில் கூறப்பட்டுள்ளன.
இத்திட்டத்துக்காக மிகப் பிரமாண்டமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திட்டமானது, ஆண்டுக்கு 35,000 கோடியிலிருந்து 40,000 கோடி ரூபாய் வரை முதலீடாகக் கொண்டு செயல்பட உள்ளது. திட்டக் கால முழுமைக்கும் மொத்தம் 8,00,000 கோடி ரூபாய் முதலீடு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தேச மதிப்பாகும். இது இன்னும் கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளிமிருந்து நிதி
திட்டத்திற்கான நிதியைத் தனியாரிடமிருந்தும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமிருந்தும் கார்ப்பரேட்டுகளிடமிருந்தும் திரட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 2020க்குள் 110 பில்லியன் ரூபாய் அளவுக்குச் சரக்கு ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் திட்டமானது 20 ஆண்டுகளில் முடிப்பது எனத் திட்டமிடப்பட்டு அது 10 ஆண்டு காலமாகக் குறைக்கப்பட்டு இறுதியில் 5 ஆண்டுக் காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதல்கட்டமாக,1000 கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டிலுள்ள 12 துறைமுகங்களையும் 1208 தீவுகளையும் சரக்குப் போக்குவரத்துக்காக அதி நவீனப்படுத்துவதையும், அத்துடன் 189 கலங்கரை விளங்கங்களையும் நவீனப்படுத்துவதையும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
திட்டத்துக்காக 101 நதிகள்
சரக்குப் போக்குவரத்துக்கானதாக 101 நதிகள் அரசினால் பிரகடனப்படுத்தப்பட உள்ளன. இதில் 55 நதிகளுக்குக் கப்பல் போக்குவரத்துத் துறை சிறப்பு ஆலோசகர்களை நியமித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டவுடன் அவசியமான அனுமதிகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன. ஒடிசா மாநிலம் முதலில் இத்திட்டத்தை அமல்படுத்திட முன்வந்துள்ளது. திட்டத்தை விரைவில் அமல்படுத்திட சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கியுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்கரையையொட்டி 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கம்பெனி சட்டத்தின் கீழ் இந்தியன் துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற கம்பெனியை கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ரயில் போக்குவரத்துடன் பெரிய மற்றும் முக்கிய துறைமுகங்கள் இணைக்கப்பட உள்ளன. இத்துறைமுக ரயில் கார்ப்பரேஷனின் தொடக்க முதலீடாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 11 துறைமுகங்களின் பங்குகளுடன் இக்கார்ப்பரேஷன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015இல் இந்த கார்ப்பரேஷனுடன் தொடர்புகொண்டு 23 திட்டங்கள் செயல்படுத்தப்படத் தொடங்கி விட்டன. 29,500 கோடி ரூபாய் முதலீட்டில் 26 ரயில் பாதைகள் போடப்பட்டு அவை துறைமுகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
இதுவரை ஆறு துறைமுகங்கள்
இதுவரை சாகர் மாலா கீழ் திட்டமிடப்பட்டுள்ள ஆறு துறைமுகங்களாவன: கேரளாவில் விழிஞ்சம் (அதானிக்கு அளிக்கப்பட உள்ளது), தமிழகத்தில் குளச்சல் துறைமுகம், மகாராஷ்டிரத்தில் வதவான் துறைமுகம், கர்நாடகத்தில் தடாடி துறைமுகம், ஆந்திராவில் மச்சிலிப்பட்டணம் துறைமுகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சாகர் துறைமுகம் ஆகியன.
திட்டத்தை அமல்படுத்திட மையப்படுத்தப்பட்ட வலிமையான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமை அமைப்பாகக் கடந்த 2015இல் சாகர் மாலா உச்சநிலை கமிட்டி (Sagar Mala Apex Committee) அமைக்கப்பட்டது. வளர்ச்சிக் கம்பெனியாகவும் பதிவு செய்யப்பட்ட சாகர் மாலாவின் உச்சநிலை கமிட்டியின் தலைவராகக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் இருப்பார். மாநில அளவில் முதல்வர்களின் தலைமையில் சாகர் மாலா கமிட்டிகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவை இயங்கும்.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 150 திட்டங்களுக்கு அதிவிரைவான சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் என கப்பல் போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலைத் துறையும் அறிவித்துள்ளன.
யார் பயனடைவார்கள்?
மோடி அரசினால் உருவாக்கப்படும் சாகர் மாலா திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கார்ப்பரேட்டுகள் எந்த நோக்கத்துக்காக மோடி ஆட்சியைக் கொண்டு வந்தார்களோ, அது நிறைவேறப் போகிறது. மோடியின் நெருங்கிய நண்பர் அதானியின் கார்ப்பரேட் குழுமம் குஜராத்தில் 6,456 ஏக்கர் நிலத்தைக் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது. மத்திய அரசில் கொண்டுள்ள தனது அரசியல் செல்வாக்கைக் கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு 1 ரூபாய் வீதத்தில் பெற்றார். ஏற்கனவே சில தீவுகளையும் ஆஸ்திரேலியாவில் சில சுரங்கங்களையும் கொண்டுள்ள அதானி தற்போது இந்தியக் கடற்கரை நிலங்களில் பெரும்பகுதியை இத்திட்டத்தின் மூலம் கைப்பற்றலாம்.
அதானியின் கார்ப்பரேட் குழுமம் கடந்த ஆண்டை விட 5 விழுக்காடு அதிகமான அளவில் அதாவது 151.1 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது/ இக்கம்பெனியின் துறைமுகங்கள் தாம்ராவும் விசாகப்பட்டணமும் காட்டுப்பள்ளியிலும் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளதும் இக்கம்பெனிக்கு சாதகமான அம்சமே. இந்த அமைவிடத்தினை வைத்தே அந்த குழுமம் 23 விழுக்காடு சரக்குப் போக்குவரத்தை அதிகரித்துக் கொண்டது. அதானி குழுமம் 2015-16இல் ரூ.7,255 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. சாகர் மாலா மேலும் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுக்கும்.
இதைத் தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தில் கட்டுமானத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் லார்சன் மற்றும் டியூப்ரோ கம்பெனியும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுவரும் எர்த் மூவர்ஸ் ஆகிய கார்ப்பரேட்டுகள் பெரும் லாபம் ஈட்டவும் சாகர் மாலா கைகொடுக்கும்.
கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் பேரழிவு
திட்டத்தின் முதன்மை நோக்கமே கடற்கரைகளையும் உள்நாட்டு நீர்நிலைகளையும் சரக்குப் போக்குவரத்துக்காக மாற்றுவதாகும். திட்டத்தினால் கடல் சூழலுக்கும் கடற்கரைச் சூழலுக்கும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து தேசிய கண்ணோட்ட ஆவணத்தில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. ஆனால் மீனவர்களின் பாதிப்புகள் குறித்து ஆவணமே கூறுகிறது. ஆவணத்தின் இறுதி அத்தியாயத்தில் மீனவர்களின் வறுமை நிலைமையை விரிவாகக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறுகிறது. ஆனால், அதற்காக எந்தத் திட்டமும் குறிப்பிடப்படாமல் போகிற போக்கில் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையில் வசிக்கின்றனர். 2011இல் கடற்கரை மீனவர்கள் குறித்த கணக்கெடுப்பில் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டுக்குள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களைத் திரும்ப செலுத்த முடியாமல் மீண்டும் கடன் வாங்கி மீள முடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர்.
பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது. 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்குத்தான் பஸ் வசதிகள் உள்ளன. இவ்வளவு துல்லியமாக அவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் திட்டத்தின் ஆவணம், அவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள், வெளியேற்றப்படுவார்கள் என்பது குறித்து மவுனமே சாதிக்கிறது.
முரண்பாடு
ஆவணத்தில் சாகர் மாலா திட்டம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும், பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக எந்த ஆய்வுகளும் செய்யப்படவில்லை. இன்னொருபுறம் சுற்றுச்சூழல் அனுமதியானது தாமதிக்கப்படாமல் அதிவிரைவாக அளிக்கப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான அமைச்சகம் அறிவித்துள்ளதும் நினைவுகூரத்தக்கது.
கடற்கரை முழுமையும் துறைமுகங்களின்கீழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். கடற்கரையையொட்டி ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனால் சாகர் மாலா திட்டத்துக்காகவும் அதன் ஒரு பகுதியான ஸ்மார்ட் நகரங்களுக்கும் சேர்த்து லட்சக்கணக்கான கடற்கரை நிலங்களும் அவற்றையொட்டியுள்ள விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.
உள்நாட்டு அகதிகளாக?
கடற்கரை நிலங்களிலும் உள்நாட்டு நீர்வழித்தடங்களையொட்டிள்ள மீனவர்களும் விவசாயிகளும் வெளியேற்றப்படுவார்கள். கடல்வளத்தையும் உள்நாட்டு நீர்நிலைகளையும் சார்ந்துள்ள மீன்பிடிப் பொருளாதாரமும் விவசாயமும் முழுமையாகச் சீர்குலையும். இதனால் மீனவர்களும் விவசாயிகளும் இடம்பெயருவதைத் தவிர, வேறு வழியில்லாததால் நகரங்களை நோக்கி உதிரித் தொழிலாளர்களாகவும் மாறுவார்கள். அதற்கு வழியில்லாதவர்கள் உள்நாட்டு அகதிகளாக, பிழைக்கும் வழியின்றி அலையும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
நிலக்கரி இரும்புப் பொருட்கள், அலுமினியப் பொருட்கள் உள்ளிட்ட எண்ணற்ற சரக்குகளின் போக்குவரத்தினால் ஏற்படும் மாசினால் மீன் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் தாவர இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும். இப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மீட்க முடியாதபடி நாசமடையும்.
இறுதியாக, தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தைச் சார்ந்து தொடங்கப்படுவதால் கடற்கரைகள் நீர் வழித்தடங்கள் மற்றும் தீவுகளும் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். உலக அளவில் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் அபாயமாக கால நிலை மாற்றம் உள்ளது. தற்போது துறைமுகம் சார்ந்த வளர்ச்சியினால் இப்பகுதி முழுமையும் அதிகமான அளவில் வெப்பமடையும். கடல் அதிகமான அளவில் வெப்பமானால் அது பேரழிவில்தான் முடியும். எனவே, நீலப் பொருளாதாரம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு பெருங்கனவுத் திட்டமாகும், ஆனால், அது கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் பேரழிவுத் திட்டமாகும்.
*
துணை நின்றவை:
1. Occupation of the Coast, BLUE ECONOMY IN INDIA,
A Report published by Programme for Social Action (PSA) New Delhi-110016,
2. Sagar Mala , National Perspective Plan, April,2016.
3. Revisiting Financing Blue Economy,Blue Economy(https://aktexploit.wordpress.com/2017/10 /23/ financial-analysis-of -the-blue economy-sagarmalas-case-in-point/)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா? தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹாஃப்வே ஹோம்ஸ் மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நா...
வீடியோ கேம் கள் -- ஒருவித மனநோய் வீடியோ கேம்களுக்கு அடிமையாகுதலை ஒருவித மனநோய் என உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது . இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிப் பல ஆண்டுகளாகச் சமூக , மருத்துவ தளங்களில் விவாதம் நடந்துவந்த நிலையில் உலகச் சுகாதார அமைப்பு , இது மனநோய்க்கு இட்டுச்செல்லக் கூடும் என எச்சரித்துள்ளது . இந்த அறிவிப்பு வீடியோ விளையாட்டுகள் என்னும் மெய்நிகர் உலகில் புழங்குவதால் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த கவனத்தைப் புதுப்பித்துள்ளது . மாய உலகில் நம்மை உலவச்செய்யும் இந்த விளையாட்டைப் பற்றிப் பார்க்குமுன் , இதுபோன்ற விளையாட்டுகள் உளவியல் ரீதியாக நம்மை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பார்ப்போம் . வீடியோ விளையாட்டின் உளவியல் அம்சங்கள் ஒரு திரைப்படம் அல்லது கலைப் படைப்பு ரசிக்கப்படும் உளவியலிருந்து தொடங்குவோம் . திரைப்படம் தொடங்கும்போது பார்வையாளர்களின் அடையாளப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு தொடங்குகிறது . படைப்புடன் பார்வையாளரின் அடையாளப்படுத்திக்கொள்வது (identification) இல்லைய...
நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்! சேது ராமலிங்கம் நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்? இயற்கையின் இயக்க விதி நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவா...